Tuesday, September 14, 2010

சர்வம் – போலிகள் மயம்

போலி மார்க் சான்றிதழ்களை வழங்கி, பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் இடம் பெற முயன்ற மாணவர்கள் சிலர் பிடிபட்டுள்ளதையடுத்து, குற்றவாளிகளைப் பிடிக்க, காவல்துறை தனிப் படைகளை அமைத்துள்ளது. நாடு போய்க் கொண்டிருக்கிற நிலையில், அப்படியே முக்கிய குற்றவாளிகள் சிக்கினாலும், போலீஸ் விசாரணையில் அவர்கள் இப்படி பதில் அளித்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

உங்க தொழிலே போலி மார்க் சான்றிதழ்கள் தயாரிக்கிறதுதானா?”

இல்லைங்க. பல தொழில்களிலே அதுவும் ஒண்ணு. எந்த சர்டிஃபிகேட் வேணும்னாலும் எங்க கிட்டே கிடைக்கும். போலி பாஸ்போர்ட், போலி விசா, போலி பத்திரம், போலி முத்திரைத் தாள்னு நாங்க தயாரிக்காத டாக்குமென்டே இல்லை. பாக்கறதுக்கு ஒரிஜினலை விட நல்லாவே இருக்கும்

அடப் பாவிங்களா! உங்களுக்கு வேறே தொழிலே தெரியாதா?”

ஏன் தெரியாது? ஒரு காலத்திலே கள்ள நோட்டே அடிச்சவங்க ஸார் நாங்க. அங்கே எங்களை விட சீனியர்கள் இருந்தாங்க. அதான் போலி சர்டிஃபிகேட்கள் தயாரிக்கிற வேலையிலே இறங்கினோம்

கவர்மென்ட் செய்ய வேண்டிய வேலையை எல்லாம் நீங்க எப்படிய்யா செய்யலாம்? அது சட்ட விரோதம்னு தெரியாதா?”

என்ன ஸார் பேசறீங்க நீங்க? உங்க கவர்மென்ட்லே எந்த சர்டிஃபிகேட்டையாவது காலா காலத்துலே வாங்க முடியுமா? மைல் கணக்கிலே க்யூவிலே நின்னு, மாசக் கணக்கிலே இழுத்தடிச்சு, கண்டவங்களுக்கெல்லாம் லஞ்சம் கொடுத்துத்தானே எதையும் வாங்க வேண்டியிருக்குது? எங்க கிட்டே அப்படியில்லை. எந்த சர்டிஃபிகேட்டும் கேட்டவுடனே கிடைக்கும். ஃபிக்ஸட் ரேட். மேற்கொண்டு பைசா தர வேண்டியதில்லை. மக்களுக்கு நீங்களும் நல்லது செய்ய மாட்டீங்க, நாங்களும் செய்யக் கூடாதுன்னா எப்படி?”

இதுக்கெல்லாம் உங்களுக்கு பணம் எங்கேயிருந்து கிடைச்சுது?”

போலி செக் கொடுத்து, பேங்க்லேர்ந்து பணம் வாங்கித்தான் முதல் போட்டேன்.

எப்படி ஒரிஜினல் மாதிரியே உங்களாலே போலிச் சான்றிதழ்களைத் தயாரிக்க முடியுது?”

நாங்க உங்களை மாதிரி சம்பளத்துக்கு வேலை செய்யறவங்க இல்லை ஸார். தொழில்லே அக்கறை இருக்கிறவங்க. அதனாலேதான் எங்களை ஒழிக்க அரசாங்கத்தாலே முடியலை. போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்கிறேன்னு புறப்பட்டீங்க. என்ன ஆச்சு? ஒரிஜினலையெல்லாம் ரத்து பண்ணிட்டு நிக்கறீங்க. தேவையா உங்களுக்கு இந்த வேலை?”

இப்ப நான் எந்த சர்டிஃபிகேட்டைக் கேட்டாலும் உடனே தர முடியுமா?”

என்ன ஸார் அப்படிச் சந்தேகப்படறீங்க? இப்பவே உங்களுக்கு போலி ப்ரமோஷன் ஆர்டர் போட்டுத் தரவா? யாரும் கண்டுபிடிக்க முடியாது. கோர்ட்டுக்குப் போனாக் கூடக் கவலையில்லை. அங்கேயும் எங்க ஆளுங்க இருக்காங்க. தேவைப்பட்டா போலி ஜட்ஜ்மென்டே வாங்கிக் காட்டறேன்

ஐயையோ... அதெல்லாம் வேண்டாம்” 

பயப்படறீங்க போல இருக்குது. சரி, பேங்க் லோன் எத்தனை லட்சம் வேணும்? பத்தே நிமிஷத்திலே எல்லா டாக்குமென்டையும் ரெடி பண்ணி, சேங்ஷனும் வாங்கிக் கொடுத்துடறேன்

யோவ்... கேக்கற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுய்யா! எப்படி உங்களாலே இதெல்லாம் செய்ய முடியுது?”

தனியா முடியுமா ஸார்? அததுக்குன்னு ஆள் வெச்சிருக்கோம். பேப்பர் வாங்கணும். ஸ்டாம்ப் செய்யணும். கையெழுத்துப் போடணும். பிரிண்ட் பண்ணனும். ஏஜென்டுங்க வெக்கணும். டிஸ்ட்ரிப்யூஷன் செய்யணும். டைப்பிஸ்ட், க்ளார்க், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், பி.ஆர்.ஓ.ன்னு ஏராளமான பேருக்கு சம்பளம் கொடுக்கறோம். பாதி வருமானம் அதிகாரிகளுக்கு கமிஷன் கொடுக்கறதிலேயே போயிடுது. ஒரு தொழிலதிபர் ஆகறதுன்னா சும்மாவா?”

ஒரு சட்ட விரோத செயல்லே இத்தனை பேரையா ஈடுபடுத்தறீங்க?”

அதை ஏன் அப்படிப் பாக்கறீங்க? இந்தத் தொழில் மூலமா எத்தனை குடும்பங்களைக் காப்பாத்தறோம்னு பாருங்க. உங்க கவர்மென்டாலே இவங்களுக்கெல்லாம் வேலை கொடுக்க முடியுமா? ஆனா எங்களுக்கு இன்னும் ஆள் தேவைப்படுது. யாராவது இருந்தா சொல்லுங்க

உங்களாலே கவர்மென்ட்டுக்கு எவ்வளவு கெட்ட பேரு தெரியுமா?”

என்ன கெட்ட பேரு? சொல்லப் போனா, கவர்மென்ட் வேலையை நாங்க குறைச்சிருக்கோம். நான் கட்டற அளவுக்கு வருமான வரி நீங்க கட்டறீங்களா? அரசாங்கத்துக்கு உங்களாலே லாபமா? என்னாலே லாபமா? மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்க

மாட்டிக்குவோம்ன்ற பயமே இல்லையாய்யா உங்களுக்கு?”

நல்ல கேள்வி. இப்படித்தான் என் ஃப்ரண்ட் ஒருத்தன் பத்தாவதே பாஸ் பண்ண முடியாம கஷ்டப்பட்டுக்கிட்டிருந்தான். நான்தான் பரிதாபப்பட்டு டாக்டர் சர்டிஃபிகேட் வாங்கிக் கொடுத்து அவனை போலி டாக்டராக்கினேன். மாட்டிக்கிற மாதிரி சூழ்நிலை வந்ததும், டக்குன்னு அவனை போலி ஸி.பி.ஐ. அதிகாரியா மாத்திட்டேன்

நீ எப்படிய்யா இந்தத் தொழிலுக்கு வந்தே?”

அது பெரிய கதைங்க. எங்கப்பா பெரிய லட்சாதிபதியா இருந்தவருங்க. ஒருநாள் வருமான வரித் துறை அதிகாரிகள் நாலஞ்சு பேர் வந்து, வீட்டை சோதனை போட்டு எல்லாத்தையும் அள்ளிக்கிட்டுப் போயிட்டாங்க. அப்புறம்தான் அவங்க போலி வருமான வரித்துறை அதிகாரிகள்னு தெரிஞ்சது

போலீஸ்லே புகார் கொடுத்தீங்களா?”

கொடுத்தோம். குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க எங்கப்பா போலீஸுக்கு எக்கச்சக்கமா லஞ்சமும் கொடுத்தார். அப்புறம்தான் அவங்க போலி போலீஸ் அதிகாரிகள்னு தெரிஞ்சது.

ஐயையோ!” 
கவலையிலே எங்கப்பா சாராயம் குடிக்க ஆரம்பிச்சாரு. பாவம், அது கள்ளச் சாராயம்னு அப்ப அவருக்குத் தெரியலை

அப்புறம்?”

கள்ளச் சாராயம் குடிச்சதிலே உடம்பு கெட்டு, பலவிதமான வியாதிகள் வந்தது. டாக்டர் கிட்டே போனோம். வியாதி முத்தின பிறகுதான் அவர் போலி டாக்டர்னு புரிஞ்சுகிட்டோம்.

அடடா! நல்ல டாக்டர்கிட்டே போயிருக்கக் கூடாதா?”

நல்ல டாக்டரைத் தேடிக் கண்டுபிடிச்சுப் போனோம். அவர் எழுதி கொடுத்த மருந்தைத்தான் எங்கப்பா சாப்பிட்டார். ஆனா, அதெல்லாம் போலி மருந்துகள்னு எங்களுக்கு முதல்லேயே தெரியாமப் போச்சு...

அட கஷ்ட காலமே!

சாகறதுக்கு முன்னாலே எங்கப்பா என்னைக் கூப்பிட்டு, ‘மகனே... போலிகளாலே என் வாழ்க்கையே சீரழிஞ்சிடுச்சு. அதுக்கு நீ பழி வாங்கணும். போலிகள் மூலமாவே வாழ்க்கையிலே நீ ஜெயிச்சுக் காட்டணும்னு சத்தியம் வாங்கிக்கிட்டாரு

நீ என்ன பண்ணே?”

ஆரம்பத்திலே போலி பாக்கெட் தண்ணி, போலி மினரல் வாட்டர் தயாரிச்சு வித்தேன். வருமானம் போதலை. போலி லாட்டரிச் சீட்டு அச்சடிச்சேன். அரசாங்கம் தடை பண்ணிடுச்சு. திருட்டு வி.சி.டி. போட்டேன். போலீஸுக்கு கமிஷன் குடுத்து கட்டுப்படியாகலை. ரியல் எஸ்டேட் தொழில்லே இறங்கி, போலி மனைகளை வித்தேன். அதுலே எக்கச்சக்க போட்டி. சமாளிக்க முடியலை.

உனக்கு நல்ல சிந்தனையே வராதா?”

வந்ததுங்க. அதனாலேதான் எனக்குப் பதிலா இன்னொருத்தனை பரீட்சை எழுத வெச்சு, ப்ளஸ் டூ பாஸ் பண்ணேன். போலி அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் மூலம் தாசில்தார் ஆஃபீஸ்லே க்ளார்க்கா சேர்ந்தேன். ஆறே மாசத்திலே நானே போலி ப்ரமோஷன் ஆர்டர் போட்டுக்கிட்டு தாசில்தாராவே ஆயிட்டேன்...

அடப்பாவி!

இப்படி படிப்படியா முன்னேறும்போதுதான் மக்களுக்கு சேவை செய்யணும்ங்கற ஆசை வந்தது. அங்கேயே தொழில் நுணுக்கம் கத்துக்கிட்டு, போலி டிரைவிங் லைசென்ஸ், போலி ஜாதி சான்றிதழ், போலி இருப்பிடச் சான்றிதழ்னு மக்களுக்கு வேண்டிய சான்றிதழ்களை தயாரிக்க ஆரம்பிச்சேன். நல்ல வருமானம் வந்தது. தாசில்தார் வேலையை ராஜினாமா பண்ணி தொழிலதிபர் ஆயிட்டேன்.

உன்னை மாதிரி இந்தத் தொழில்லே இருக்கிற எல்லோருமே லட்சாதிபதிகள்தானா?” 

அப்படிச் சொல்ல முடியாதுங்க. போலி பஸ் டிக்கெட் அச்சடிச்சு கஷ்டப்படறவங்களும் எங்க தொழில்லே இருக்காங்க” 

போலிச் சான்றிதழ்களைத் தயாரிக்கிறது தப்புன்னு உங்களுக்குத் தோணவே இல்லையா?” 

எதுங்க தப்பு? எங்க வளர்ச்சியைப் பார்த்துத்தான் இன்னைக்கு அரசாங்கமே க்ளோனிங் முறையிலே போலி ஆடு, மாடுகளைக் கூட உருவாக்க ஆரம்பிச்சிருக்குது. நியாயமா காபிரைட் சட்டப்படி அரசாங்கம் எங்களுக்கு நஷ்டஈடே கொடுக்கணும். போனாப் போகுதுன்னு நாங்க அதைக் கேக்கலை” 

யோவ் எதுக்கும் எதுக்கும் முடிச்சுப் போடறே?” 

அதை விடுங்க ஸார். இப்ப தலைவர்களா இருக்கிற எல்லோருமே ஒரிஜினல்தானா? மக்களையும் தேர்தல் கமிஷனையும் ஏமாத்திட்டு, எத்தனை போலிகள் தலைவர்கள் ஆகியிருக்காங்க? அதைத் தடுக்க உங்களாலே முடியுதா? நாங்க ஏமாந்தவங்கன்னுதானே எங்களைப் பிடிக்கிறீங்க? எங்க விஷயத்திலே தலையிட்டா உங்களுக்குத்தான் பிரச்சனை” 

உன்னை மாதிரி ஆளுங்களை விட்டா இந்த சமுதாயத்துக்கே ஆபத்து. உங்களை எல்லாம் உள்ளே தள்ளாம விட மாட்டோம்” 

ஓஹோ! அவ்வளவு தூரத்துக்கு துணிஞ்சுட்டீங்களா? அப்ப பிடிங்க, உங்க சஸ்பென்ஷன் ஆர்டர். முடிஞ்சா, இதை போலின்னு நிரூபிங்க.
 
 

No comments:

Energy Saver